சிவலிங்கா – விமர்சனம்


பேய்க்கதை மன்னர்களான லாரன்ஸும் பி.வாசுவும் இணைந்து உருவாக்கியுள்ள ஹாரர் த்ரில்லர் தான் ‘சிவலிங்கா’.. அந்தவகையில் ரசிகர்களுக்கு டபுள் போனஸாக இந்தப்படம் அமைந்திருக்கிறதா..? பார்க்கலாம்.

ஒரு நள்ளிரவில் ரயிலில் தனியாக பயணம் செய்யும் ஷக்திவேல் வாசு ஒரு மர்ம நபரால் கொல்லப்படுகிறார். சந்தர்ப்ப சாட்சியங்களால் அது தற்கொலை என நீதிமன்றம் மூலம் நிரூபிக்கப்பட்டாலும், அதை திட்டமிட்ட கொலை என கருதும் ஷக்தியின் காதலியின் கோரிக்கையால் அந்த வழக்கு ரகசியமாக சிபிசிஐடி அதிகாரி லாரன்சிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கோடீஸ்வரர் ஜெயபிரகாஷின் மகள் ரித்திகா சிங்கை திருமணம் செய்த கையோடு அவரையும் அழைத்துக்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேலூர் சென்று தனியாக ஒரு பங்களாவில் தங்குகிறார் லாரன்ஸ்.. ஆனால் அதன்பின்னர் அந்த பங்களாவில் ரித்திகாவின் நடவடிக்கைகளில் அமானுஷ்யமான மாற்றங்கள் ஏற்பட, ஒரு கட்டத்தில் அவரது உடலுக்குள் ஷக்தியின் ஆவி புகுந்திருப்பது தெரிய வருகிறது..

தன்னை கொன்றது யார்..? கொல்வதற்கான காரணம் என்ன என்பதை லாரன்ஸ் கண்டுபிடித்த பின்னரே ரித்திகாவின் உடலைவிட்டு வெளியேறுவேன் என நிபந்தனை விதிக்கிறது ஷக்தியின் ஆவி.. அதன்பின் வழக்கை துரிதப்படுத்தும் லாரன்ஸுக்கு ஷக்தி வளர்த்த புறா ஒன்று சூசகமாக சில குறிப்புகளை உணர்த்துகிறது. சில பல அதிரடி விசாரணைகளுக்கு பிறகு உண்மையான குற்றவாளி யார் என்பதை க்ளைமாக்ஸில் அம்பலப்படுத்துகிறார் லாரன்ஸ்.

துப்பறிதல் மற்றும் ஹாரர் என இரண்டு அம்சங்களை இணைத்து த்ரில்லிங்கான ஒரு படமாக இதை இயக்கியுள்ளார் பி.வாசு.. சிபிசிஐடி அதிகாரியாக வரும் லாரன்ஸ், ஷக்தியின் கொலையை விசாரிப்பதில் ஆரம்பத்தில் மெத்தனம் கட்டினாலும், போகப்போக கதையின் விறுவிறுப்பில் தன்னை இணைத்துக்கொண்டு அசத்துகிறார். குறிப்பாக அந்த 20 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி மிரட்டல்..

வழக்கமான ஹீரோயின் போல ஆரம்பத்தில் வந்தாலும், ஷக்தியின் ஆவி தனது உடலுக்குள் புகுந்ததும் இன்னொரு அவதாரம் எடுக்கும் ரித்திகாசிங்கும் இருவித நடிப்பில் பிரமிப்பூட்டுகிறார். சக்திக்கும் அவருக்குமான தொடர்பும், அதுவே ஷக்தியின் மரணத்துக்கு காரணமாக அமைவதும் செம ட்விஸ்ட்..

பிரியாணி ரஹீமாக கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நின்று பரிதாபம் அள்ளுகிறார் ஷக்திவேல் வாசு. திருடனாக வந்து, லாரன்சிடம் மாட்டிக்கொண்டு வேலைக்காரனாக மாறும் வடிவேலு, லாரன்ஸின் அம்மா ஊர்வசியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் செம கலாட்டா. ராதாரவிக்கு இதில் வேலை குறைவு என்றாலும் நடிப்பில் நிறைவு. ஜெயபிரகாஷ், பானுப்ரியா, சாரா, ப்ரதீப் ராவேத், ஜாகீர் உசேன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்..

திரில்லிங் காட்சிகளில் சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவும் தமனின் பின்னணி இசையும் இணைந்து போட்டி போட்டு நம்மை பயமுறுத்துகின்றன. படத்தை விறுவிறுப்பாக பி.வாசு இயக்கி இருகிறார். கொலையாளியை தனக்கு அடையாளம் காட்டப்போகும் லாரன்ஸின் மனைவி உடலில் புகுந்துகொண்ட ஷக்தியின் ஆவி அவ்வளவு கடுமையாக நடப்பதற்கு காரணம் என்ன..?

தன்னை கொன்றவன் யார் என்பதை அறிந்துகொள்ள கிடைத்த ஒரே துருப்பு சீட்டான மர்ம நபரை தானே ரயிலில் இருந்து தள்ளிக்கொன்று விட்டு, பின் மீண்டும் கதறுவது ஏன் என சில கேள்விகள் லாஜிக்காக எழுகின்றன. படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது பழைய பி.வாசு என்பவர் என்ன ஆனார் என்கிற கேள்வி எழாமல் செய்கிறது.