திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை! கமலா திரையரங்க அதிபர் கணேஷ்

ஒரு துறையில் பிரபலமானவர்களைச் திரைப்படங்களில் நடிக்க வைப்பது அன்று முதல் இன்று வரை தொடர்கிறது.அந்த வகையில் திரையுலகிற்கு முகம் தெரிந்தவரான திரையரங்கு உரிமையாளர் கமலா சினிமாஸ் கணேஷ் நடிக்க வந்துள்ளார். அவர் விரைவில் வெளிவரவிருக்கும் ‘தற்காப்பு’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

‘கமலா சினிமாஸ்’ கணேஷை அண்மையில் சந்தித்த போது…!

திரையரங்கு உரிமையாளரான நீங்கள் திடீரென்று சினிமாவில் நடிக்க வந்தது எப்படி?

எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்ததில்லை. அப்பா ‘தூங்காநகரம்’ படத்தில் நடித்தபோது ,தான் வில்லனாக நடிக்கப் போகிறோம் என்று அவரும் நினைக்கவில்லை. ஆனால் அதில் நடித்த போது எல்லாரும் பாராட்டினார்கள். அவருக்கு அதில் நல்ல பெயர் கிடைத்தது. நடித்ததற்காக அப்பா பணம் எதுவும் வாங்கவில்லை.

அப்பா அப்போது எங்களிடம் சொன்னது என்ன தெரியுமா? நம் சினிமா நன்றாக இருக்க வேண்டும் அப்போதுதான் தியேட்டர் நன்றாக இருக்கும். அந்த சினிமாவுக்கு நம்மால் பெரிதாக எதாவது செய்ய முடியவில்லை என்றாலும் இப்படி படங்களில் நடிக்கும் போது பணம் வாங்கக் கூடாது. நீயும் இப்படி நடித்தால் காசு பணம் வாங்காதே என்றார். அந்த ‘தூங்காநகரம்’படத்தில் பணியாற்றியவர்கள் என்கிற
அறிமுகம் பழக்கத்தில் அடுத்தடுத்து என்னிடம் நடிக்கக் கேட்டார்கள் அப்படித்தான் நான் நடிக்க ஆரம்பித்தேன்.

நான் இதுவரை ‘வல்லினம்’ ,’புதியதோர் உலகம் செய்வோம்’ ,’தற்​கா​
ப்பு’ ‘பப்பரப்பாம்’, ‘என்னோடு விளையாடு’ என படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து’துடி’ யில் நடிக்க இருக்கிறேன்.

நடிகராக உங்கள் அனுபவம் எப்படி?

நான் திரையரங்கு சார்ந்து சுமார் 30 ஆண்டுகள் அனுபவங்கள் கொண்டவன். ஆனால் ஒரு நடிகராக நான் மிகவும் இளையவன். அனுபவமில்லாதவன், கற்றுக் கொள்ள வேண்டியவன் என்கிற நிலையில்தான் இருக்கிறேன். சுருக்கமாக சொன்னால் நடிப்பில் நான் ஒரு குழந்தை.

நட்பில் பழகியவர்கள் ,அறிமுகமானவர்கள் ,தொடர்பில் உள்ளவர்கள் என்றுதான் என்னை நடிக்க அழைக்கிறார்கள் .அதில் தேர்வு செய்து நடிக்கிறேன். நான் நடிப்பிற்கு புதியவன் என்றாலும் திரையுலகில் அப்பாவுக்கு இருக்கும் மரியாதையால் எங்களுக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள்.படங்களில் நடிக்கும் போது மூத்த நடிகர் அண்ணன் ராதாரவி, இயக்குநர் சமுத்திரக்கனி போன்றவர்கள் எனக்காக பொறுமை காத்து ஒத்துழைத்தார்கள்.

எல்லா படங்களிலும் வில்லனாக வருகிறீர்களே..?

என் ஆறு படங்களிலும் எனக்கு வில்லன் வேடம்தான் இந்த முகம் வில்லனாக நடிக்க பொருத்தமாக இருக்குமா? எனக்கு அது சரிவருமா என்று இயக்குநர்களும் நினைக்கவில்லை. நானும் நினைக்க வில்லை .ஏனென்றால் முரட்டு முகம் பெரிய மீசை, மிரட்டும் கண்கள்,முகத்தில் மரு, மச்சம் என்று வில்லன்களுக்கு தோற்றம் இருந்தது அந்தக் காலம். இப்போது அதெல்லாம் தேவையில்லை. ​பளபளப்பான
முகத்திலேயே வில்லத்தனம் செய்ய முடிகிறது. இது ஒரு காலமாற்றம்.
பெரிய அழகனான அரவிந்தசாமியையே வில்லனாக பார்க்க முடிகிறது, ரசிக்கவும் செய்கிறார்கள். வில்லன்களும் கைதட்டல் வாங்கும் காலமிது. எனவே தைரியமாக வில்லனாக நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களுக்குப் பணம் வாங்கப் போவதில்லை.

திரையரங்கு அதிபராக உங்கள் அனுபவம் எப்படி?

அப்பா முதலில் புதுக்கோட்டயிலுள்ள பிரகதாம்பாள் என்கிற திரையரங்கை லீஸ் எனப்படும் குத்தகை முறையில் எடுத்து நடத்தினார் அதன்மூலம் திரையரங்கம் சார்ந்த அனுபவங்களைக் கற்றுக் கொண்டார். சென்னை வந்த போது முதலில் கிருஷ்ணவேனி என்கிற பழைய திரையரங்கத்தை வாங்கினார் அது பழையதாக இருக்கிறதே என்று புதிதாக ஒன்று கட்டநினைத்த போது கட்டியதுதான் கமலா திரையரங்கம்.இந்த திரையரங்கம் 1972ல் கலைஞர் அவர்களால் திறப்புவிழா செய்யப்பட்டு தொடங்கப் பட்டது. இதன் 25வது ஆண்டு விழாவிலும் கலைஞர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முதலில் ஏசி இல்லாமல் தொடங்கியது.பின்னர் ஏசி கொண்டதாக மாற்றப்பட்டது. பிறகு 2 அரங்குகளாக மாற்றிக் கட்டப்பட்டது.
.
இப்போது ஆண்டுக்கு 120 படங்கள் வெளியாகின்றன. இத்தனை ஆண்டுகளில் பல ஆயிரம் படங்கள் வெளியாகியிருக்கும்.

சினிமா சிரமத்தில் இருக்கிறது, திரையரங்கம் பக்கம் கூட்டம் வருவதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே..?

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்று நல்லமாதிரி படம் எடுப்பவர்கள் சொல்வதில்லை. எடுக்கத் தெரியாமல் எடுப்பவர்கள், திட்டமிடத் தெரியாமல் எடுப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பது ஏமாற்று வேலை.இது மிகவும் பொய்யான தவறான கருத்து என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா இன்று நன்றாகவே இருக்கிறது. அன்று 10 அரங்கில் 50 நாட்கள் ஓடியபடம், இன்று 50 அரங்கில் 10 நாளில் வசூல் செய்து விடுகிறது. இன்றைய சூழல் மாறிவிட்டது. இனி 50 நாள் 100 நாள் என்று ஓடுவது சாத்தியமில்லை. அதன்படி ஓடாததில் நஷ்டமும் இல்லை. ஏனென்றால் குறுகிய நாட்களிலேயே வசூல் செய்து விடுகின்றன. 1000 பேர் பார்க்கும்படி முன்பு சென்னையை 4 பகுதிகளாகப் பிரித்து சில அரங்குகளில் படங்கள் வெளியாகும். இன்று வடபழனி பகுதியிலேயே 9.000 பேர் பார்க்க முடிகிறது. சென்னையிலேயே 50 திரையரங்குகள் இருக்கின்றன. எனவே சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பதை என்னால்ஏற்றுக் கொள்ள முடியாது.அதைப்போலவே திருட்டு விசிடியால் வசூல் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

திருட்டு விசிடியால் பிரச்சினை இல்லை ,பார்க்கிற மாதிரி நல்ல படம் வந்தால் பார்க்க வருவார்கள். ‘பாகுபலி’ எப்படி வசூல் செய்தது? ‘பாபநாசம்’ எப்படி வசூல் செய்தது?’தனி ஒருவன்’எப்படி வசூல் செய்தது?

‘தனிஒருவன்’ அதற்கு முந்தைய வசூல் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. வீட்டிலிருந்து விரைவில் போய்ப் பார்க்கிற தூரத்தில் சினிமா தியேட்டர் இருக்கும் போது யாரும் திருட்டுவிசிடி பக்கம் போவதில்லை. தியேட்டர் போய் பார்ப்பது ஒரு அனுபவம். அதை விரும்புகிறவர்கள் நல்ல படம் வரும்போது பார்க்கவே செய்கிறார்கள்.இதுதான் உண்மை, யதார்த்தமும் கூட.

திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் புகார்கள் சொல்லப் படுகின்றனவே.?

இதை நான் மறுக்கவில்லை. திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் குறைகள் இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்கின்றன. டிக்கெட் விலையில் சொல்வது ஒன்று, விற்பது ஒன்று என்று இன்றும் நடக்கிறது.

500 டிக்கெட் விற்றால் 250 தான் விற்றது என்று பொய்க் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. கட்டணம் அதிகம், சுத்தமில்லை, வசதி இல்லை என்கிற நிலையும் இருக்கிறது. ஒரு திரையரங்கில் வாகனங்களுக்கு மணிக்கு 40 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். டிக்கெட் 120 ரூபாய்தான் வண்டிவிட 4 மணி நேரத்துக்கு 160 ரூபாய் என்றால் என்ன அநியாயம் இது? கடடணங்களால் இப்படி மக்களை கசக்கிப் பிழியக் கூடாது.

சினிமா வளர நாங்கள் மட்டும் மாறினால் போதாது எல்லாரும் மாற வேண்டும்.

அப்படி என்ன உங்கள் திரையரங்கில் வசதிகள் உள்ளன?

எங்களைப் பொறுத்தவரை மல்டிப்ளக்ஸ் எனப்படும் சொகுசு திரையரங்குகளில் குறைந்த கட்டணம் நிறைவான வசதி கமலா அரங்கில் மட்டும்தான் என்பேன். இதை ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் என்றால் நான் சொல்லியிருக்க முடியாது. இப்போது எல்லாம் முறைப் படுத்தி மேம்படுத்தி நடத்தி வருகிறோம். இப்போது எனக்குத் தகுதி இருக்கிறது என்னால் இப்போது சொல்ல முடியும்.

முன்பு வெண்திரையாக இருந்தது. இப்போது வெள்ளித்திரையாக மாறி இருக்கிறது.

முன்பு படத்தின் பிலிமைப் பொறுத்து படத்தில் தரம் இருக்கும் இப்போது டிஜிட்டலாகி விட்டதால் ஒரே தரத்தில் எல்லா அரங்கிலும் காணமுடியும்.

ஒருகாலத்தில் மணலைக் குவித்து டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தார்கள். பின்னர் தரை, பெஞ்ச், நாற்காலி, சோபா என்று மாறியிருக்கிறது அப்போது க்யூவில் நின்று வியர்க்க விறுக்க வெளியில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும். இன்று நெட்டில் வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் எடுக்கலாம். இதனால் டிக்கெட் எடுக்கப் போய் வரவும், படம் பார்க்கப் போய் வரவும் என ஆகிற நேர விரயம் மிச்சம்.படம் பார்க்க பத்து நிமிடம் முன்பு வந்தால் போதும். எவ்வளவு சௌகரியம், பாதுகாப்பு, சுத்தம், நிம்மதி தெரியுமா? ப்ளாக் டிக்கெட்டுக்கு வேலையே இல்லை.

ஆன்லைனில் எடுப்பதால் இன்று எல்லாருடைய முகவரியும் பதிவாகி விடுவதால் குற்றச் செயல்கள் இல்லை.படம் பார்ப்பது இன்று பாதுகாப்பான அனுபவமாக மாறி இருக்கிறது. யார் தலையும் மறைக்காத வகையில் திரையரங்க இருக்கைகள் அமைப்பு உள்ளது. ஒலியமைப்பு சரிவரத் துல்லியமாகக் கேட்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

குடிப்பவர்களை புகைப்பவர்களை நாங்கள் திரையரங்குகளில் அனுமதிப்பதில்லை.இங்கே சிகரெட் விற்பதே இல்லை. முன்பெல்லாம் இடைவேளையில் மட்டும்தான் தின்பதற்கு ஏதாவது வாங்க முடியும். திடீரென்று ஒரு குழந்தை அழுதால் அதற்குப் பால் தேவைப்பட்டால் இப்போது உள்ளே உள்ள உணவகத்தில் வாங்க முடியும். எப்போதும் எதுவும் இப்படி உணவகத்தில் வாங்கிக்கொள்ள முடியும்..டிக்கெட் எடுக்க காத்திருக்கும் இடமும் கூட ஏசி செய்துள்ளோம். இதற்கெல்லாம் காரணம் எங்களுக்குப் படம் பார்க்க வருகிறவர்களின் வசதிதான் முக்கியம்.

திரை நட்சத்திரங்களுடனான உங்கள் நட்பு பற்றி?

அப்பா காலத்திலிருந்து எல்லா நடிகர்களும் எங்கள் திரையரங்குக்கு வந்து இருக்கிறார்கள் ; இன்றும் வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து ஒரு படம் ஓடினால் அதன் விழாக்களை திரையரங்கில் நடத்துவது வழக்கம். அப்போது இப்படி பலரும் வந்திருக்கிறார்கள். நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் எங்கள் தியேட்டரின் ஓட்டல் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் அப்போது ரஜினி​ ​
சாரும்வந்திருந்தார்.​ ​அன்று சிவாஜி அவர்களுக்கு திருமணநாள் .அப்பா அன்றைய விழாவில் அந்த கல்யாண நாளைக் கொண்டாடினார்​.​

சூப்பர்ஸ்டார்​ தாலி எடுத்துக் கொடுக்க சிவாஜி அவர்கள் மீண்டும் கமலா அம்மாளுக்குத் தாலிகட்டினார். இதற்காக ரஜினிசார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எங்கள் அரங்கில் அதிகமாக ரஜினிசார் படங்களே வெளியாகும். கமல்சார் படங்கள் வெளியிட்டது மிகமிகக் குறைவே. இந்த நிலையில் புதிதாக திரையரங்கம் கட்டி​ட​ திறப்புவிழாவுக்கு அழைத்த போது மறுக்காமல் அவர் வந்ததுடன் இது என் குடும்பவிழா என்று பேசினார். அது மறக்க முடியாது.

நடிகர் விஜய் என் கல்லூரிக்காலம் முதல் நண்பர்.அவரது ஆரம்ப காலத்தில் ‘பூவே உனக்காக’, ‘லவ்டுடே’ ,’சூரியவம்சம்’ படங்களுக்குச் சேர்த்து முப்பெரும் விழா எடுத்தோம். அப்போது கலைஞரை அழைத்தோம். விஜய் என் மீதும் தியேட்டர் மீதும் அன்பும் அக்கறையும் உள்ளவர். அவர் யோசனையின்படி தான் இரண்டாவது சிறிய அரங்கையே கட்டினோம். என் அண்ணன் மகன் திருமணத்துக்கு கேப்டன் வந்தார் .அது மறக்க முடியாதது. இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு.

உங்கள் அப்பாவுடனான அனுபவங்கள்?

எங்கள் அப்பாவுக்கு இந்த திரையரங்கம்தான் உயிர். எங்கள் அப்பாவுக்கு வள்ளிப்பன், நாகப்பன், நான் என்று மூன்று பிள்ளைகள். அப்பா எங்களிடம் சொன்னது ‘மூன்று பேருக்கும் தனித்தனியாக சொத்து எழுதி வைத்து விட்டேன். ஆனால் தியேட்டரை மட்டும் மூன்று பேருக்கும் சேர்த்து எழுதியுள்ளேன். எக்காலத்திலும் இது ஓடிக் கொண்டிருக்க வேண்டும்​.​
இதை விற்கக் கூடாது.’ என்றதுடன், ‘முடிந்தால் சினிமாவுக்கு ஏதாவது உதவுங்கள் ‘என்றார். மற்ற சொகுசு திரையரங்குகளில் சினிமா விழா நடத்த 2 லட்ச ரூபாய் கட்டணம் உள்ளது. எங்கள் அரங்கில் மட்டும் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்குகிறோம்.இதை திரையுலகினர் பாராட்டுகிறார்கள்.இதுதான் அப்பா ஆசைப்பட்டது.

நீங்கள் ஏன் படம் தயாரிக்கவில்லை?

அப்பா முதலில் ‘பட்டாக் கத்தி பைரவன்’ என்கிற படத்தை விநியோகம் செய்ய வாங்கினார் .அதில் நாலு லட்சம் நஷ்டம் வந்தது. அத்துடன் விநியோகம் செய்வதை விட்டுவிட்டார். தயாரிப்பாளராகிப் படம் தயாரிக்க இயக்குநர் எஸ்.பி.எம் மை படம் இயக்க அழைத்தார். அவர் உங்கள் மனப்பான்மைக்கு தயாரிப்பு சரிப்பட்டு வராது வேண்டாம் என்றார். அத்துடன் அப்பா தயாரிப்பாளர் ஆகும் எண்ணத்தை கைவிட்டு விட்டார்.