நாலு வருஷத்துக்கு முன்னாடி வடிவேலு பண்ணின தப்பை இப்ப ராதிகாவும் சிம்புவும் பண்றாங்க..!

அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியுமா..? கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக பக்கம் சேர்ந்துகொண்ட வடிவேலு தான் கலந்துகொண்ட கட்சிக்கூட்டங்களில் எல்லாம் விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தார். அதன்மூலம் திமுகவுக்கு உதவினாரோ இல்லையோ, தனது சொந்தப்பகையை இந்தவிதமாக பேசி தீத்துக்கொண்டார்.

இப்போது நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் அவ்வப்போது ராதிகா பேசிவரும் பேச்சுக்களை கேட்டால், வடிவேலு அளவுக்கு தரம் தாழ்ந்து இல்லாவிட்டாலும், அநாகரிகமாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை. அவரது கணவரை எதிர்த்து விஷால்.. அதாவது விஷாலின் தலைமையிலான அணி போட்டியிடுகிறது.. அவ்வளவு தானே.. போட்டியிட்டுவிட்டுத்தான் போகட்டுமே.. எதற்கு இந்த கூப்பாடு..?

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதானே.. ஒரு கட்சி பிடிக்கவில்லை என்று தானே இன்னொரு கட்சிக்கு ஓட்டுப்போடுகிறார்கள்.. அதேமாதிரி சரத்குமாரின் தலைமையில் அவர்களுக்கு திருப்தியில்லை என்பதால் தானே இன்று இந்த அளவுக்கு தேர்தல் சூடு கிளப்புகிறது.

சரத்குமார் பக்கம் நியாயம் இருக்கிறது என்றால் நிச்சயம் அவர்தானே ஜெயிப்பார். அது தேர்தலில் தெரிந்துவிடுமே.. அதற்குள்ளாக எதற்கு விஷால் மீது இத்தனை ஏசல்கள்.. பூசல்கள்..? ஒரு விழாவில் பேசும்போது, “மல்லாக்கா படுத்து எச்சிய துப்பாதீங்க”ன்னு சொன்னார் ராதிகா.. ஒகே இதுகொஞ்சம் டீசன்டான எதிர்ப்பு தான்..

ஆனால் தமிழ்நாட்டில் விபரம் தெரிந்த அனைவருமே விஷாலை விஷால் என்றுதானே அழைக்கிறார்கள்.. ராதிகா மட்டும் இப்போது என்ன திடீரென ‘விஷால் ரெட்டி’ என வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறார்.. ஜாதியை சுட்டிக்காட்டி பிரச்சனையை திசைதிருப்புகிறாரா…?

அப்படியானால் கூடவே இருக்கும் கார்த்தியையும் அவரது ஜாதியை சேர்த்து அழைக்கவேண்டியதுதானே… விஷால் எப்போதாவது ‘சரத்குமார் நாடார்’ என எப்போதாவது சொல்லியிருக்கிறாரா..? இல்லை ‘ராதிகா நாயுடு’ என்றுதான் சொல்லியிருக்கிறாரா..?

ஒருவேளை.. விஷாலை தெலுங்கர் என இனத்தை வைத்து தள்ளிவைக்க பார்க்கிறாரா…? அப்படியானால் ரஜினியை கன்னடர் என சொல்லும் தைரியம் இருக்கிறதா ராதிகாவுக்கு..? சங்கத்தின் பெயரே தென்னிந்திய நடிகர் சங்கம் தானே.. அப்புறம் தலைவர் பதவியில் தமிழன் இருந்தால் என்ன, தெலுங்கன் இருந்தால் என்ன..? தமிழ்நடிகர் சங்கம் என பெயரை மாற்றலாம் என பலரும் சொன்னபோது, ஒருபோதும் முடியாது என்று சொன்னது ராதிகாவின் கணவர் தானே.

இதில் விஷாலை கிண்டல் பண்ணுகிறோம் என்கிற நினைப்பில் ‘பாவம் அந்த தம்பிக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ?’ என்று நக்கலாக சொல்லியிருக்கிறார் ராதிகா. விஷாலின் மேடைப்பேச்சு எதையும் ஒருமுறை கூட ராதிகா கேட்டது இல்லையா..? ‘பூஜை’ படத்தில் விஷாலுடன் அவருக்கு அம்மாவாக நடித்தாரே, அப்போது ஷூட்டிங்கில் எந்த மொழியில் விஷால் பேசினார் என்பது மறந்துவிடும் அளவுக்கு செலக்டிவ் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா ராதிகா..?

அதேபோல இளைஞர்கள் பட்டாளம் எல்லோரும் விஷால் அணியில் திரள, தான் மட்டும் சரத்குமார் அணிக்கு வாண்டடாக சென்று ஆதரவு கொடுத்தார் சிம்பு… அது அவருக்கு விஷாலின் மீதான தனிப்பட்ட கோபமோ, இல்லை அவரது சொந்த முடிவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்..

ஆனால் நேற்று நடந்த பிரஸ்மீட்டில் விஷாலை நரி என்றும் டேய் என்றும் திட்டியதெல்லாம் ரொம்பவே ஓவர்.. அவர்கள் தான் தனியாக நிற்கிறார்களே.. விட்டுவிடவேண்டியதுதானே.. பின்னே ராதிகாவும், சிம்புவும் ஏன் வலியப்போய் திரும்ப திரும்ப விஷாலை சொரிந்து விடுகிறார்கள் என்பது தான் புரியவில்லை.

ஆனால் தோல்வி பயம் மட்டும் அவர்கள் செய்கையில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. அப்பட்டமாக தெரிகிறது. இல்லையேல் அவசர பிரஸ்மீட் எதற்கப்பா..?