விஜய்சேதுபதிக்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த ‘இஞ்சி மிட்டாய்’..!

விஜய்சேதுபதி நடிப்பில் ‘வசந்தகுமாரன்’ என்ற பெயரில் ஒரு பட அறிவிப்பு வெளியானது உங்களுக்கு தெரியும். ஸ்டுடியோ-9 சுரேஷ் என்பவர் தயாரிப்பதாக சொல்லப்பட்ட இந்தப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய்சேதுபதி.

வேண்டுமானால் வாங்கிய அட்வான்ஷை திருப்பித்தருகிறேன் என்று சொல்ல, அதற்கு சுரேஷ் மசியவில்லை. ஒரு வழியாக் பஞ்சாயத்து பேசி, சுரேஷ் தயாரிப்பில் ஒரு படம் நடித்து தருவதாக முடிவானது.. இது ஒருபக்கம் இருக்க, இதேபோல இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதில் நடிக்கவும் இல்லாமல், நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி கொடுக்காமல் விஜய்சேதுபதி டேக்காவிட, விவாகாரம் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு போனது..

வேறொன்றுமில்லை தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமாருக்கு ஒரு படம் நடித்து தருவதாக வாக்களித்த விஜய்சேதுபதி, அந்தப்படத்திற்கு சங்குதேவன் என பெயரிட்டு, அந்தப்படத்தை தானே லைன் புரட்யூசராக இருந்து தயாரித்து தருவதாக 2 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் அதன்பின் வேறு படங்களில் பிசியாகி போன விஜய்சேதுபதி, சங்குதேவனை சரியான கதை கிடைக்கவில்லை என கிடப்பில் போட்டார்.

சதீஷ்குமார் தேடிப்போனபோதேல்லாம் ஏதாவது சால்ஜாப்பு சொல்லி இழுத்தடித்தார் விஜய்சேதுபதி. சரி வாங்கின அட்வான்சையாவது திருப்பித்தந்தால் பரவாயில்லை என்றால், அதிலும் நயா பைசா கூட திரும்பி வரவில்லை., பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு, இப்போது விவகாரத்தை கவுன்சிலுக்கு கொண்டுவந்துவிட்டார் சதீஷ்.

கலைப்புலி தாணு, சரத்குமார், ராதாரவி முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில், ஒன்று படம் நடித்துத் தர வேண்டும் இல்லை என்றால் கொடுத்த பணம் இரண்டுகோடி ரூபாயை கோடி வட்டியோடு திருப்பித்தர வேண்டும் என விஜய் சேதுபதிக்கு இரண்டே இரண்டு ஆப்ஷன் மட்டும் கொடுக்கப்பட்டது. படத்தில் நடிக்க முடியாது என மறுத்த விஜய் சேதுபதி வாங்கிய 2 கோடி ரூபாயை வங்கி வட்டியுடன் திருப்பித்தருவதாக ஒப்புக் கொண்டார்.

அதன்படி முதலில் இறைவி படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் ஒரு கோடியையும், இடம் பொருள் ஏவல் படத்திற்கு கிடைக்கும் சம்பளத்தில் 25 லட்சத்தையும் தருவதாக உறுதி அளித்துள்ளார். மீதி தொகையை அடுத்ததாக ஒவ்வொரு படத்திற்கும் சம்பளம் வாங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தருவதாக கூறியுள்ளார்.

இத்தனைக்கும் இந்த ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் தான் விஜய்சேதுபதியின் நடுவுல கொஞ்சோம் பக்கத்த காணோம் படத்தை விநியோகம் செய்து விஜய்சேதுபதியின் மீது வெளிச்சம் பாயவைத்தார்.. இந்த நிறுவனம் தான் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தயாரித்து விஜய்சேதுபதியின் மார்க்கெட்டை ஸ்டெடியாக்க உதவினார்.

என்னதான் தன்னை வளர்த்துவிட்டவர்களுடன் கருத்து வேறுபாடு என்றாலும், கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் டீசண்டாக நடந்துகொள்ளவேண்டும் என விஜய்சேதுபதிக்கு ‘இஞ்சி மிட்டாய்’ கொடுத்து அனுப்பி வைத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.