சினிமா தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் சுமூக தீர்வு…

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இணையதளங்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் என்றும் நமக்கு தகவல் கிடைத்தது.

வெள்ளம் வரும் முன் அணை கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவசரக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், மேற்படி அமைப்பின் முடிவுக்கு எதிராக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானம் அனைத்து இணையதளங்களுக்கும் அனுப்பப்பட்டு, பிரசுரிக்கப்பட்டன. அதோடு, எங்களது எதிர்ப்பையும், கண்டனங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தோம். எமது இந்த பதில் நடவடிக்கை காரணமாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மன வருத்தம் அடைந்த தகவல் நம்மை வந்தடைந்தது.

அதன் காரணமாகவும், திரைப்படத்துறைக்கும் ஊடகத்தினருக்கும் இடையிலான மோதலை மேலும் வளர விடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு.ராதாரவி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு ஜி.சிவா ஆகியோரும், இரு தரப்பினரையும் சந்திக்க வைத்து, பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்கிற நல்லலெண்ண முயற்சியை மேற்கொண்டனர்.

அவர்களின் முயற்சியின்படி, நேற்று – அதாவது 25.09.2014 அன்று – தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இணையதளங்களை புறக்கணிக்கும் முடிவை அவர்கள் தற்காலிகமாக திரும்பப் பெற்றுக்கொள்ள உடன்பட்டனர். அதோடு, இப்பிரச்சனை குறித்து விரைவில் நிரந்தர தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற எமது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளோம். மேலும், ஊடகத்தினருக்கும், திரைப்படத்துறைக்கும் இடையிலான பிரச்சனை நிலவிய இக்கட்டானநிலையில் எமக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்த நடிகர் திரு.விஷால் அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்பிரச்சனை சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டதற்கு காரணமாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு.ராதாரவி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு ஜி.சிவா, தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.டி.சிவா, தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு.விக்ரமன் மற்றும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் பி.ஆர்.ஓ. நண்பர்களுக்கும் நமது நன்றி.