சினேகாவின் காதலர்கள் விமர்சனம்

snehavin_kadhalargal_movie_review

காதல் என்பது ஒரு பெண்ணின் மனதுக்குள் ஒரு முறை தான் பூக்கும் அப்படி ஒரு முறை பூ பூத்துவிட்டால் அதை அவள் ஜென்மத்திற்கும் மாற்றிக் கொள்ள மாட்டாள் என்று பக்கம் பக்கமாக வசனம் பேசி கழுத்தை அறுக்கமால் சினேகாவின் காதலர்கள் படத்தின் மூலம் அடுத்தடுத்த காதலனை அடிக்கடி மாற்றும் ஒரு நல்ல பெண்ணாக வருகிறார் சினேகாவாக வரும் கீர்த்தி. தன்னை பெண் பார்க்க வருபவரிடம் “என்னை பிடிக்கலைன்னு சொல்லுங்க” என்று சொல்லும் சினேகா. அதன்பின் பெண் பார்க்க வந்தவனையே கூட்டிக் கொண்டு கொடைக்கானல் லாங் டிரைவ் போகிறார். ஏன்? எதற்கு? என்பதெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்…

சினேகாவின் முதல் காதல் கல்லூரியில் தொடங்கி, இரண்டாவது காதல் கோடம்பாக்கத்தில் பயணித்து, மூன்றாவது காதல் கொடைக்கானலில் சென்று முடியும் அளவுக்கு ஒரே காதல் கட்சி தாவல் தான். ஆனாலும் சினேகாவின் காதல் ஒவ்வொரு இடத்திலும் உடையும்போது அதற்கு ஒரு அர்தமுள்ள காரணத்தை சொல்லி நம் முகத்தை சுழிக்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குநர் முத்துராமலிங்கன்.

படத்தில் அத்தனை பெரிய நட்சத்திரங்கள் இல்லை ஆனாலும் படத்தின் போக்கில் ஒரு இடத்திலும் சலிப்பை கொண்டு வராமல் அடுத்து எவன்டா என்று கமெண்ட் அடிக்கிற அளவுக்கு ஜாலியாக போகிறது கீர்த்தியின் காதல்(கள்). கல்லூரியில் படித்துக் முடிக்கும் நேரத்தில் சென்னையில் திசைகள் பத்திரிக்கையில் வேலை கிடைத்து சென்னை வந்துவிட, உதவி இயக்குநர்கள் உலகம் என்ற கட்டுரையை எழுதுகிறார். இதனால் அலுவலகத்தில் பாராட்டு, பேட்டி எடுத்த உதவி இயக்குநருடன் காதல் என்று ட்ராக் மாறுகிறத.தான் கஷ்டப்பட்டு எழுதிய கதையை திருடி அதை படமாக எடுத்து ரிலீஸ் செய்துவிடுகிறார் அந்த புண்ணியவான் தயாரிப்பாளர். இதை கேள்விப்பட்டதும் சென்னையிலிருந்தே காணாமல் போகிறார் அந்த அசிஸ்டெண்ட் டைரக்டர்.

இதனால் மனமுடைந்திருக்கும் கீர்த்திக்கு அடுத்த வேலை வருகிறது. இதனை தான் எடுத்து மன நிம்மதிக்காக கொடைக்கானல் வரை செல்கிறார். அங்கே மலைவாழ் மக்களுடன் வசிக்கும் இளவரசனை(உதய்) சந்திக்க நேர்கிறது. அவரின் சொந்த கதை சோக கதையை கேட்டு அவர் மேல் காதல் வருகிறது. உதய்குமாரின் காதல் கதை தர்மபுரி காதலை நினைவுபடுத்த தவறவில்லை. இவர்களின் காதல் அப்படியே ஒருபடி மேலே சென்று கசமுசா வரை சென்றுவிட இந்த காதலாவது நிலைக்குமா என்று எதிர்ப்பார்த்தால் அங்கேயும் ஒரு கட் வைத்து கீர்த்தியை சென்னைக்கு பேக்கப் செய்கிறார் உதய். இறுதியில் கீர்த்தியின் காதல் என்ன ஆனது? மாப்பிள்ளையுடன் கொடைக்கானல் எதற்கு வந்தாள்? என்பதே மீதி கதை.

அறிமுக இசையமைப்பாளர் பிரபாகர் படத்திற்கு தேவையான அதுவும் இதுபோன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு இவ்வளவு அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார். பின்னணியிலும் கலக்கியிருக்கிறார் குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கிட்டத்தட்ட 20 நிமிடம் வசனங்களே இல்லாமல் பின்னணியில் ஓட்டுவதென்றால் கடினமான காரியம் தான்.

ஒரு ஆணுக்கு மட்டுமே தனது முன்னாள் காதல்களையும் காதலிகளையும் நினைத்துப் பார்க்க உரிமை வழங்கப்பட்டிருக்கின்ற இந்த சமூகத்தில் , அதே அளவு உரிமை பெண்ணுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது சிநேகாவின் காதலர்கள் படத்தின் மூலம். அதுவும் அந்த டைரக்டருடன் காதல் தோல்வி அடையும் போது வரும் பாடல் அருமை.

சினேகா எழுதிய காதல் கடிதங்களை காதலனிடம்(ரசிகர்கள்) சரியாக கொண்டு சேர்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராமலிங்கன். காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள துடிக்கும் காதலனும்/காதலியும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் இந்த ‘சினேகாவின் காதலர்கள்’..