அப்போது காலம் கடந்திருக்கும்.. முழித்துக்கொள்வாரா மன்மதன்..?

ரெண்டு வருடங்களுக்கு ஒரு படம், அட்லீஸ்ட் வருடத்திற்கு ஒரு படம் என நடித்துக்கொண்டிருந்த உலகநாயகன் கமல்ஹாசனே இப்போது கிட்டத்தட்ட மூன்று படங்களை முழுதாக முடித்துவிட்டார்.. இதோ நான்காவது படத்திற்கு தயாராகி வருகிறார். அவரது மூன்று படங்களில் எதை முதலில் ரிலீஸ் பண்ணலாம் என்பதில் தான் பிரச்சனையே தவிர, அவரால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் எந்த படமும் நின்றதில்லை..

ஆனால் இன்னும் சினிமாவில் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்க இந்த மூன்று வருடமாக ஒரு படம் கூட ரிலீஸ் பண்ணமுடியாமல் தவிக்கிறார் சின்ன மன்மதன்.. இவர் விஷயத்தில் கதையே வேறு.. எதையும் முழுதாக முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு போகாமல், அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என வேலை பார்ப்பதால் இப்போது நடித்துவரும் எல்லா படங்களும் அந்தரத்தில் தான் நிற்கிறது.

குறைந்த நாட்களில் படப்பிடிப்பை நடத்தி, அதில் நாலு ரூபாயை மிச்சம் பண்ணி, நாற்பது ரூபாய் லாபம் பார்க்கலாம் என நினைத்து , இது நம்ம ஆளுதான் என நம்பி…. படத்தை ஆரம்பித்த ‘பசங்க’ இயக்குனர் இப்போது அடிக்கடி விரக்தியில் ‘மெரீனா’ பீச் பக்கம் சுற்றுகிறார். எல்லோருக்கும் அம்பு விடும் மன்மதன், இவருக்கு வம்பை தந்துவிட்டார்.

நாய் செல்லமாக ஆட்டுமே.. அந்த சாதனத்தின் பெயரை கொண்ட படமோ ரிலீஸ் தேதி மாற்றப்படும் எண்ணிக்கையில் சென்னை ஏர்போர்ட் கண்ணாடி உடையும் சாதனையை மிஞ்சிவிடும் போல இருக்கிறது. ‘தல’ படத்தை முடித்துவிட்ட இயக்குனர் ஏற்கனவே பாதியில் நிறுத்தியிருந்த மன்மதனின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டாரா என்று தெரியவில்லை. அதற்குள் சீயானுக்கு வேறு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். அப்படியானால் மன்மதனுக்கு மீண்டும் பெப்பேவா என்றும் தெரியவில்லை.

ஒரு நேரத்தில் ஒரு படம் என லிமிட் வைத்து நடித்திருந்தால் இந்நேரம் வருடத்திற்கு ஒன்று என மூன்று படங்களை இந்த கேப்பில் ரிலீஸ் பண்ணியிருக்கலாம். ஆனால் செய்யும் தொழிலில் பக்தி இல்லை.. நடித்த படத்தை முடித்துக்கொடுத்து ரிலீஸ் பண்ண மன்மதனுக்கு சக்தியில்லை.. ஆனால் எனக்கு எதிராக யாரோ சதி பண்ணுகிறார்கள் என புலம்புவதை மட்டும் கரெக்டாக பண்ணுகிறார் மன்மதன்..

படம் தயாரிப்பவருக்கு அது வட்டிக்கனக்கு.. ஆனால் நடிப்பவருக்கு அது வாழ்க்கை கணக்கு.. இன்னும் கொஞ்ச நாள் கழித்து திரும்பி பார்க்கும்போதுதான், மன்மதனுக்கு தான் என்னவெல்லாம் இழந்திருக்கிறோம், எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது தெரியவரும்.. ஆனால் அப்போது காலம் கடந்திருக்கும்.. முழித்துக்கொள்வாரா மன்மதன்..?