சந்தானத்துக்கு சம்பள பாக்கி கொடுக்காத விஷயம் ‘க்யூப்’ நிறுவனத்துக்கு எப்படி தெரிந்தது.?

முன்னெல்லாம், ஒரு படம் தயாராகி வரும் நிலையில் படப்பிடிப்பு முடிந்தும் கூட பலருக்கு சம்பள பாக்கி இருக்கும். ஆனாலும் கூட யாரும் கவலைப்பட மாட்டார்கள்.. படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பட பிரிண்ட்டுகள் தயாராகும் லேபிற்கு சென்று தங்களது பாக்கி குறித்த லெட்டரை (லேப் லெட்டர் என்று பெயர்) கொடுத்துவிடுவார்கள்.

சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் இவர்களுக்கெல்லாம் அந்த இடத்திலேயே பாக்கியை செட்டில் செய்த பின்னர் தான், லேப்பில் இருந்து படப்பெட்டியையே தூக்க விடுவார்கள்.. ஆனால் இது க்யூப் காலம் என்பதால் யாருக்கு, எவ்வளவு பாக்கி என்பதையெல்லாம் க்யூப் நிறுவனத்துக்கு விலாவாரியாக யாரும் கடிதம் கொடுப்பதில்லை.

ஆனால் சம்பள பாக்கி இருப்பதாக கடிதம் கொடுத்தால் க்யூப் நிறுவனம் கூட படத்தை ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் பல தடைகளை தாண்டி வெளியான சிம்புவின் வாலு படத்திற்கு கூட இப்படித்தான் நடந்தது.. படம் ரிலீஸான அன்றைய தினம் சிறப்புக்காட்சியாக பல இடங்களில் எட்டு மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் க்யூப் நிறுவனம் படத்தை திரையிடுவதற்கான அனுமதியை வழங்காமல் ரசிகர்களுக்கு டென்சனை ஏற்படுத்தியது.

விஷயம் சிம்புவின் காதுகளுக்கு போனதும், விசாரித்ததில் சந்தானத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் பாக்கி வைத்துள்ளதாக லெட்டர் இருப்பதால் தான் தங்களால் ரிலீஸ் பண்ண முடியவில்லை என க்யூப் நிறுவனம் சொன்னது. ஒருவழியாக சந்தானத்திடம் சிம்பு பேச, சிம்புவால் வளர்ந்த சந்தானம் பதறிப்போய் தனக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது என கூறி உடனே க்யூப் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதம் தந்த பின்னரே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டனவாம்.

சரி.. சந்தானத்திற்கு ‘வாலு’ பட நிறுவனம் பாக்கி வைத்துள்ள விவகாரம் க்யூப்பிற்கு எப்படி தெரிந்தது..? ஒருவேளை சந்தான்மே லெட்டர் கொடுத்தாரா..? என்பதெல்லாம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுக்களாகவே நின்றுவிட்டன.