உறுப்பினர்களுக்கு முதல் சந்தோசம் ; தீபாவளி பரிசு வழங்கிய நடிகர்சங்கம்..!

நம்மை சார்ந்து இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதற்கு, மலையளவு காரியம் எல்லாம் செய்யவேண்டியது இல்லை. ஒரு ரூபாய்க்கு நீங்கள் வாங்கிக்கொடுக்கும் சாக்லேட் கூட சந்தோசம் தரும்.. கொடுக்கவேண்டும் என்கிற மனம் தான் முக்கியம்.. அந்த அடிப்படையில் தான் தற்போது நடிகர்சங்க பொறுப்பிற்கு வந்துள்ள நாசர், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியுள்ளார்கள்..

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நடிகர்சங்க உறுப்பினர்களை நடிகர்சங்க வளாகத்திற்கு வரவழைத்த நிர்வாகிகள் ஆண்களுக்கு வேட்டி, பெண்களுக்கு சேலை இவற்றுடன் ஸ்வீட் பாக்ஸ் சேர்த்து தீபாவளி பரிசாக கொடுத்தனர். வந்திருந்த, சுமார் 2௦௦௦ உறுப்பினர்கள் முகத்திலும் ஒற்றுமையாக இணைந்ததற்கான சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. வெளியூரில் இருப்பவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே பரிசுப்பொருட்கள் சென்று சேரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நாசர், விஷால், கார்த்தி, எஸ்.வி.சேகர் ஆகியோர் கலந்துகொண்டு கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கினார்கள்.. விஷால் பேசும்போது, “நீங்கள் அனைவரும் ஆசைப்பட்டது போல் இங்கே நடிகர் சங்க கட்டிடம் வரும் , கட்டிடம் வந்ததும் இங்கே நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும்” என வந்தவர்களை உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தார்.