மைந்தன் – விமர்சனம்

இப்படி நகரப்பின்னணியுடன் எடுக்கப்படும் ஒரு தமிழ்ப்படத்தில் வழக்கமாகக் கொஞ்சமாகத்தான் தமிழில் பேசுவார்கள், பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். ஆனால், மைந்தன் தமிழ்ப்படத்தில் கொஞ்சமாக ஆங்கில வசனங்களும் , சரளமாக அதிக அளவில் தமிழ் வசனங்களுமா..? நம்பத்தான் முடியவில்லை. தயாரிப்பாளர்கள் யார் என்று பார்க்கும் போது , அட அதுதான் காரணமா என்று எண்ணத்தோன்றியது. ஆம், மலேசியாவில் பிரசித்திபெற்ற நிறுவனமான ஆஸ்ட்ரோவுடன் இணைந்து டத்தோ சாகுல் ஹமீது மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் தயாரித்திருக்கும் மைந்தன் படம் பல அதிசயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

ஒரு சாயலுக்கு, அப்படியே ஆரம்ப கால அருண்பாண்டியன் மாதிரி இருக்கும் குமரேசன் தான் கதாநாயகன். வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்கு அப்புறம் தனிமையில் குடியுடன் குடித்தனம் செய்துகொண்டிருக்கும் அவர் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் ஒரு சிறுவன் ஹனுமந்தன். முதலில் அவனைத் துரத்தினாலும், அவன் யார் என்னவென்று தெரிந்து கொண்டபிறகு தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான்.

துரதிஷ்டவசமாக , அந்தச் சிறுவனை விட அவனது காடி தான் அவனுக்குப் பெரிதாகப் போய்விட , எங்கேயிருந்து தப்பித்து வந்தானோ அந்தக் கும்பலிடமே சிறுவனை இழக்க நேரிடுகிறது. சரி, காடி (கார்) தான் கிடைத்துவிட்டதே , துரத்திப் பிடித்துவிடலாம் என்றால், இன்னொரு துரதிஷ்டமாக காடி ஒரு விபத்தில் சிக்கி நொறுங்கி விடுகிறது.

என்னசெய்வது என்று சாலையில் ஓடிக்கொண்டு இருக்கும் போது, வீட்டில் வேண்டாவெறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிச்சயதார்த்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் புன்னைகைப் பூ கீதா கண்ணில் பட, இல்லை இல்லை அவரது காடி கண்ணில் பட, அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான் குமரேசன். ஹனுமந்தனைக் கண்டு பிடித்தானா..? வில்லனிடம் மாட்டிருக்கும் அத்தனை சிறுவர்களையும் மீட்டானா..? என்பதே விறுவிறுப்பான இரண்டாம் பகுதி.

தொடர்ந்து அவனுக்கும் கீதாவிற்கும் இடையில் நடக்கும் களேபரங்கள் , பிளாஷ் பேக்கில் வரும் குமரேசன் ஷைலா நாயர் ஆகியோருக்கிடையிலான காதல் போன்றவை பொழுதுபோக்கின் உச்சக்கட்டம். உண்மையாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைய புதுமையான காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு கீதாவிற்கும் அவரது காடியை ஓட்டிக் கொண்டிருக்கும் குமரேசனுக்கும் இடையில் நடைபெறும் தள்ளு முள்ளுவும் அதனை அவர்களுக்கு இணையாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண் ஆதங்கத்துடன் பார்த்து பெருமூச்சு விடும், ஆங்கிலப் படங்களில் குறிப்பாக ஜாக்கி சான் படங்களில் வருவது போன்ற வயதுக்கு வந்தோர் காட்சி விரசமில்லாமல் சுவராஸ்யமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

மாரியாத்தா உனக்கு கூழ் ஊத்துறேன் என்று அடிக்கடி பிரார்த்தித்துக் கொள்ளும் கீதா , ஒரு முக்கியமான கட்டத்தில் கடவுளை மாற்றலாம் என்று முடிவு செய்து ஜெய் ஆஞ்சனேயா என்று கூறுவது குபீர் நகைச்சுவை!

உண்மையில் , காடி பந்தயம் – சாகசங்கள் போன்றவற்றைக் கதைக் களமாக அமைத்து தமிழ் நாட்டில் சென்னை போன்ற நகரங்களில் கூட இதுபோன்ற படங்களை எடுக்க இயலாது. இருந்தாலும் தமிழகத்தில் படமாக்கியது போன்று காண்பிப்பதற்காக, அவர்கள் ஊரிலேயே கொஞ்சம் பழமையான இடங்களை தேடிப்போய் படமாக்கியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தாலும், நம்ம ஊரை விட சுத்தமாகவும் , அகன்ற சாலைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. சென்னையில் எடுக்கப் பட்டது போல காட்டவேண்டுமானால் சாலையில் சாக்கடைகளை விட வேண்டும், குப்பைகளை ஆங்காங்கே கொட்ட வேண்டும், பாவம் இந்த எண்ணம் அவர்களுக்கு வரவில்லை போல!

பாடல் வரிகள் அற்புதம். குறிப்பாக குமரேசனுக்கும் சிறுவன் ஹனுமந்தனுக்கும் இடையில் வரும் அந்தப் பாடல் காட்சியில் நிறைய தன்னம்பிக்கை அளிக்கும் வரிகள், யதார்த்தத்தைச் சொல்லும் வரிகள் என்று ரசிக்கும் படி எழுதியிருக்கிறார்கள். “துடுப்பில்லாத படகு எப்படி கரையைச் சேரும்..” என்று குமரேன் பாட, “பாதிக்கடல் தாண்டிய பிறகு எதற்கு இனி தயக்கம்..” என்று ஹனுமந்தன் பதிலடி கொடுக்கிறான்.வதவதன்னு பெற்றுப்போட்ட பெற்றோர்களால் தானே நீ அனாதை ஆனாய்… என்று குமரேசன் பாட, “பாவம் விஞ்ஞான வளர்ச்சியை அறியாதவர்களைக் குறை சொல்லி என்ன பயன்..?” என்று ஹன்மந்தன் கேட்க… அட அட அட… வார்த்தைகளை நன்கு கேட்க வைத்த அந்த இசையமைப்பாளர் மான்ஷெர் சிங்கிற்கு வாழ்த்துகள்.

குமரேசன், கீதா, ஹனுமந்தன், குமரேசனின் நண்பனாக வரும் ராபிட் மேக், குமரேசனின் முதல் காதலி ஷைலா நாயர் என்று ஒரு பக்கம் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், இன்னொரு பக்கம் அனாதை விடுதி நடத்தி வரும் வில்லன், அவனது கூட்டளிகள் மற்றும் ஆளவந்தான் என்று நாடகத்தனமான நடிப்பை வெளிப்படுத்துவது கொஞ்சம் சறுக்கல் தான். அதையெல்லாம் கொஞ்சம் சரிசெய்து இருக்கலாம். மற்றபடி , ஒரு மேற்கத்திய சாயலுடன், தமிழ்மணம் கொஞ்சமும் குறையாமல், கடல்தாண்டி வசிக்கும் அந்த தமிழ் மைந்தர்கள் கொடுத்த இந்த மைந்தன் தமிழ்த்தாய்க்குப் பெருமை சேர்க்கும் படமே! இயக்குனராகவும் கதாநாயகனாகவும் ஜொலித்திருக்கிறார் குமரேசன்! மலேசியாவில் முதன்முறையாக மூன்று கோடிகளுக்கு மேல் அள்ளிக்குவித்த படம். இங்கும் வசூலை வாரிக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகமெங்கும் ஹாவன் பிக்சர்ஸ் கண்ணன் மற்றும் என் ஜி பி பிலிம் நவநீதன் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.