கமல், ரஜினியை மிரட்டி கால்ஷீட் வாங்கினாரா தாணு..? பத்தவைத்த பன்னீர் செல்வம்..!

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்சினிமாவை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ‘பாயும் புலி’ பட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் மிரட்டல் விடுத்தார் என கூறி, செப்-4 முதல் தமிழ்சினிமாவில் எந்தப்படமும் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு அறிவித்தார். (பின்னாடி அதை வாபஸ் வாங்கிவிட்டார் என்பது வேறு விஷயம்)

உடனே மறுநாள், பத்திரிகையாளர்களை வரவழைத்த தியேட்டர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம், “நங்கள் யாரையும் மிரட்டவில்லை. கலைப்புலி தாணுதான் திரையுலகின் தாதா போல நடந்துகொள்கிறார்.. லிங்கா படத்துக்காக கொடுத்த நஷ்ட ஈட்டில், செட்டில் செய்யப்படாத பாக்கி 2.75 கோடி ரூபாய் அவரிடம் தான் உள்ளது. அதை வாங்கித்தரும் பொறுப்பு வேந்தர் மூவிசுக்கு உள்ளது. அதனால் அந்தப்பணத்தை இப்போது கொடுங்கள் என கேட்கிறோம்.. இது எப்படி மிரட்டல் ஆகும்” என நியாயம் கேட்கிறார்..

அதுமட்டுமா, போகிறபோக்கில் அவர் இரண்டு வெடிகுண்டுகளையும் அல்லவா வீசினார். முதல் வெடிகுண்டு, தற்போது ரஜினியை வைத்து தாணு தயாரிக்கும் படத்தில், ரஜினியை பிளாக் மெயில் பண்ணித்தான் நடிக்கவைத்துள்ளாராம். அதாவது லிங்கா பட நஷ்ட விவகாரம் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும் என ரஜினியிடம் சொன்ன தாணு, அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி அதற்கு பிரதிபலனாகத்தான் குறைந்த சம்பளம் பேசி ரஜினியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளாராம்.

இன்னொரு வெடிகுண்டு என்னவென்றால் உலக நாயகன் கமலையும் தாணு விட்டுவைக்கவில்லையாம். அவரிடமும் அடிமாட்டு சம்பளம் பேசி (அதுவும் கோடிகளில் தான்) ஒரு படத்திற்கு கால்ஷீட் வாங்கிவிட்டாராம். அதாவது தாணு பல வருடங்களக்கு முன் கமலை வைத்து தயாரித்த ஆளவந்தானில் ஏகப்பட்ட செலவை கமல் இழுத்துவைத்துவிட்டாராம். படமும் பிளாப் ஆனதால், தாணுவுக்கு அதில் நிறைய நட்டமாம்.

அதன்பின் கமலும் தாணுவை கண்டுகொள்ளவில்லையாம். அப்போதிருந்தே கமலுக்கு செக் வைக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தாராம் தாணு. அதற்கு வசதியாக உத்தம வில்லன் பிரச்சனை மாட்ட, அதை ரிலீஸ் பண்ணவேண்டும் என்றால் பத்துகோடி தரவேண்டும் என கமலிடம் கேட்டாராம்.

ஆனால் கமல் அதற்கு உடன்பட மறுக்கவே, அப்படியானால் உங்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டு பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்கள் என கமலின் சம்பளத்தை பல் கோடி ரூபாயை குறைத்து பேசி, அக்ரிமெண்ட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு தான் உத்தம வில்லன் பிரச்சனையை தீர்த்து வைத்து ரிலீஸ் செய்தாராம்.

சொல்லப்போனால் கமலிடம் அப்படி அக்ரிமெண்ட் வாங்குவதற்காகவே உத்தம்வில்லன் ரிலீஸ் செய்வதில் பிரச்சனையை உண்டாக்கினாராம் தாணு. இதில் அவருடன் உடன்பட பன்னீர் செல்வம் மறுத்ததால் தான், லிங்குசாமியிடம் பணம் கேட்டு மிரட்டினார் என பிரச்சனையை அவர் பக்கம் திருப்பி விட்டாராம் தாணு. ஆக லிங்கா நஷ்ட ஈட்டுத்தொகையாக கொடுக்கப்பட்ட தொகையில் மீதியுள்ள 2.75 கோடியை தாணு கொடுக்கும் வரை, இப்படித்தான் பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் என்று தெரிகிறது.