ஐ படத்தின் கதை? அதற்குள் ஒரு சர்ச்சை!

ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது பேச்சே இல்லை. வெற்றி பெறுகிற எல்லா படங்களுமே பெரிய படங்கள்தான். இப்படி பேசாத திரையுலக பிரபலங்களே இல்லை. ஒவ்வொரு பட்ஜெட் பட மேடைகளிலும் இந்த வார்த்தைகளை சம்பிரதாயத்திற்காகவாவது சொல்வது மரபு. இதை இங்கே நினைவு படுத்துவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

தமிழ்சினிமா வரலாற்றிலேயே பெரிய படம் என்ற முத்திரையோடு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ஷங்கரின் ஐ! இந்த படத்தின் கதை இதுதான் என்று ஐ படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிறகு சமூக வலைதளங்களில் பெரிய கதையே கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது இன்னும் தொடர்கிறது. இந்த கதையை படித்துவிட்டு அதிர்ந்து போயிருக்கிறார் ‘சாய்ந்தாடு சாய்தாடு’ படத்தின் இயக்குனர் கஸாலி. ஏன் இந்த பதற்றம்? ஐ படத்தின் கதை என்னவென்று ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ, அதுதான் சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையும்!

என் கதையை பார்த்து ஷங்கர் காப்பியடித்துவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கு நான் ஒன்றும் சினிமா தெரியாதவன் அல்ல. ஆனால் இது ஒத்த சிந்தனையாக கூட இருக்கலாம் அல்லவா என்கிறார் அவர். இனி வலைதளங்களில் வரும் ஐ படத்தின் கதையும், அதன் பின்னாலேயே சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையும் இங்கே தரப்பட்டுள்ளது.

‘ஐ’ படத்தின் கதையாக வெளிவந்தது இதுதான்:

“விக்ரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது. ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லை. இந்நிலையில் எமி ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார். தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார். இந்நிலையின் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடிக்கின்றார். அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திரத் தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய முயற்சிக்கிறார். அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை என வில்லன் யோசித்துக் கொண்டிருக்கையில், உபேனை சந்திக்கின்றார் விக்ரம். அவரது உடம்பிலும் அந்த மருந்து ஏற்றப்படுகிறது. ஆனால், அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார் விக்ரம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார் விக்ரம். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரை கடத்துகின்றார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாற, இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூரவிலங்குகளாக மோதுகின்றனர்.
பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது தான் படத்தின் முடிவு”.

சாய்ந்தாடு சாய்ந்தாடு கதை:

ஒரு டாக்டர் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த முக்கியமான மருந்தை ஆராய்ச்சி செய்ய ‘கிளினிக்கல் டிரையல்’ என்ற மருத்துவ ஆராய்ச்சிக்காக 25 வயதுக்குட்பட்ட வாலிபர்களைக் கடத்தி மருந்தைச் செலுத்தி ஆராய்கிறார். ‘ஓ’ நெகட்டிவ், ‘பி’ நெகட்டிவ் & ‘ஏபி’ நெகட்டிவ் ரத்த குரூப் உள்ள வாலிபர்கள் மருந்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு முகம், உடலெல்லாம் கொப்புளம் வந்து வீங்கி செத்துப் போகிறார்கள். ‘ஏ’ நெகட்டிவ் பிளட் குரூப் உலகத்தில் மிக அரிதான ரத்த வகை. அது படத்தின் கதாநாயகனுக்கு இருக்கிறது.

டாக்டர் ‘ஏ’ நெகட்டிவ் குரூப் உள்ள வாலிபனைத் தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு தற்செயலான பிரச்சனையில் ஹீரோ அடிபட்டு, அந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிறான். டாக்டரும் அவனுக்கு அந்த புதிய மருந்தைச் செலுத்துகிறார்.

அவன், மருந்தின் விளைவாக பலசாலியாகிறான். சாதாரணமானவனாக இருந்தவன் பலசாலியாகி நிறைய விசயங்களைச் செய்கிறான். பின்பு, அவனுக்கும் மருந்தின் பக்க விளைவு காரணமாக முகம், உடலெல்லாம் கொப்புளம் வருகிறது. ஒரு கட்டத்தில் சீரியசாகி கோமா நிலைக்குச் செல்கிறான்.

இறுதியில், டாக்டர் என்ன ஆனார், ஹீரோ என்ன ஆனான், டாக்டரைப் பழி வாங்கினானா? என்பதுதான் படத்தின் முடிவு. மருத்துவ ஆராய்ச்சி, அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்பவைதான் கதையின் மையக் கரு.

என்ன சொல்கிறார் கஸாலி? – ‘இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர். அவர் இதுவரை அந்தப் படத்தின் கதையைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஏதுமில்லை!