அனேகன் படத்திற்காக பாடல் எழுதிய இயக்குனர் C.S.அமுதன்

எ.ஜி.எஸ் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “அனேகன்” திரைப்பட வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. அனேகன் படத்தின் இசை வெகு விரைவில் வெளிவரவுள்ளது.

கே.வி.ஆனந்தின் அயன், கோ, மாற்றான் படங்களை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க்கும் இசையமைத்துள்ளார். படத்திற்கான இசையை பற்றி இயக்குனர் கூறுகையில், “இப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் கதையின் தன்மையையும் காட்சியையும் பொறுத்து வெவ்வேறு பரிமாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

“தமிழ்படம்” இயக்கிய C.S.அமுதன் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். சில வருடங்களுக்கு முன், விளம்பரபடங்களில் பணியாற்றிய நேரத்தில் C.S.அமுதனை கே.வி.ஆனந்த் சந்தித்துள்ளார். விளம்பரபடங்களுக்காக அமுதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

C.S.அமுதன் எழுதிய பாடலை பற்றி இயக்குனர் கூறுகையில் “என் படத்தில் மென்பொருள் ஊழியர்கள், வார விடுமுறையை உற்சாகமாக கொண்டாட நினைப்பார்கள். அவர்களின் மனநிலை அறிந்து பாடலை எழுதும் பாடலசிரியர் வேண்டும் என்று நினைத்தேன். அப்போது C.S.அமுதனை நான் தேர்வு செய்தேன், ஏனெனில், அவர் இயக்கையாகவே மிகவும் தளர்வான நபர்”.