சீவி குமாரின் தயாரிப்பில் மூன்று படங்கள்

எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயலே. அதிலும் சினிமாதுறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது எட்டாகனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க தன் கை கொடுத்து உதவுவது போன்றதாகும்.

பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம் உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் “எனக்குள் ஒருவன்” பிரசாத் இயக்கத்தில் தயாரித்துள்ள சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது மேலும் மூன்று புதிய படங்களுக்கு இன்று பூஜை போட்டு பொலிவுடன் துவங்கியுள்ளது.

மூன்று படங்களை பற்றீய விவரம் பின்வருமாறு:

முதல் படம்:

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் கே.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டுடியோ கீரின் நிறுவனத்துடன் இணைந்து “இன்று நேற்று நாளை” என்ற புதிய படத்திற்கு பூஜை போட்டு படபிடிப்பை இன்று இனிதே துவக்கியுள்ளது.

இயக்குனர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

விஷ்ணு மற்றும் கருணாகரன் நடிக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவை வசந்த் (அறிமுகம்) மேற்கொள்கிறார். இசையை “ஹிப் ஹாப் தமிழா” புகழ் ஆதியும், படத்தொகுப்பை லியோ ஜான்பாலும் கவனித்து கொள்கின்றனர்.

இரண்டாம் படம்:

சூதுகவ்வும் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த நலன் குமாரசாமி தனது இரண்டாவது படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்.

தற்போது அவர் இயக்கவிருப்பது “கை நீளம்” – சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் அத்தியாயம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோ ஜான்பால் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.

அபி & அபி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து திருக்குமரன் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தின் படபிடிப்பு 12.12.2014 அன்று துவங்கவுள்ளது.

மூன்றாம் படம்:

பிட்சா, ஜிகர்தண்டா என தனது இரண்டு படங்களிலும் வித்தியாசமான கதைகளங்களை கையாண்டு வெற்றி பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் மூன்றாம் படம் “இறைவி”.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கேவிமிக் ஏரி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் படபிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது.