இளையராஜாவை குறைசொல்லும் பாரதிராஜா இசையமைப்பாளர் தேவேந்திரனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காதது ஏன்..?

எவ்வளவு காலம் ஆனாலும் சீனியர்களில் ஈகோயிஸ்ட்டுகளாக உள்ளவர்கள் மட்டும் மாறமாட்டார்கள் போல தெரிகிறதே. குறிப்பாக இளையராஜா–வைரமுத்து, இளையராஜா-பாரதிராஜா என்கிற கூட்டணி பிரிந்தபின் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவர்களில் ஒருவர் மற்றவரை மறைமுகமாகவோ, நேரடியாகவோ விழாக்களில் தாக்கி பேசுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

சமீபத்தில் கூட பாரதிராஜா, இசைஞானியை தாக்கும் விதமாக இளையராஜைவிட இசையமைப்பாளர் தேவேந்திரன் நன்கு இசையமைக்க கூடியவர், அதி புத்திசாலி, மேற்கத்திய இசை கற்றவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரால் பெரிதாக் சாதிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.. பாரதிராஜாவின் வேதம் புதிது படத்திற்கு இசையமைத்தவர் தான் இந்த தேவேந்திரன்..

பாரதிராஜாவின் படங்களுக்கு இளையராஜா தொடர்ந்து இசையமைத்து வந்தாலும் அவர் ஒருகட்டத்தில் ரொம்ப பிசியானதால், தனது வேதம் புதிது படத்திற்கு தேவேந்திரனை அழைத்து இசையமைக்க வைத்தார் பாரதிராஜா. பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.. இன்றும் கூட எங்காவது ஒரு இடத்தில் ‘கண்ணுக்குள் நூறு நிலவா’ என்கிற பாடலை கேட்க முடியும்.

இளையராஜா தொடர்ந்து பிஸியாக இருந்ததால் அந்த படத்தை தொடர்ந்து தேவேந்திரனுக்கே பாரதிராஜா வாய்ப்பு கொடுத்திருக்கலாம் தான். ஆனால் அவரோ இசையமைப்பாளர் ஹம்சலேகாவை தேடிப்போனார்.. அதன்பின்னர் நாடோடித்தென்றல் வரை மீண்டும் இளையராஜாவுடன் கூட்டணியை தொடர்ந்த பாரதிராஜா, இசைஞானியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தார். அதன்பிறகாவது, இப்போது புகழ்ந்து பேசுகிறாரே, இந்த தேவேந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே..

ஆனால் கேப்டன் மகள் படத்தில் ஹம்சலேகாவை இசையமைக்க வைத்தவர், ரோஜா படத்தில் ரகுமான் மியூசிக் ஹிட்டாகவே, தனது ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் இருந்து அவரை பிடித்துக்கொண்டார். அதன்பின் பல படங்களுக்கு ரகுமான், பின்னர் சிற்பி, வித்யாசாகர் என்று மாறினாரே தவிர இளையராஜா பக்கமும் போகவில்லை.. இவர் வாயார புகழ்கிறாரே அந்த தேவேந்திரனுக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

தேவேந்திரன் திறமைசாலி தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்போது இளையராஜாவை மட்டம் தட்டும் விதமாக தேவேந்திரனை பாரதிராஜா உயர்த்தி புகழ்வதில் உள்நோக்கம் இருப்பது நன்றாகவே தெரிகிறது.. அப்படியானால் இத்தனை காலம் அந்த தேவேந்திரனுக்கு இவர் வாய்ப்பு கொடுக்காதது ஏன் என இளையராஜாவின் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்..

பின்குறிப்பு : இளையராஜாவுடன் தங்களது கூட்டணியை முறித்துக்கொண்ட மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் என எல்லோருமே தங்களுக்குள் ஏற்பட்ட ஈகோவால் பிரிந்தார்களே தவிர, இளையராஜாவின் பாடல்களில் குறை கண்டுபிடித்ததோ, அல்லது அவை ஹிட்டாகவில்லை என்றோ பிரியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்ததக்கது.