வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – விமர்சனம்

ஒரு ஊரில் ஒரு முட்டாளும் இன்னொரு அடி முட்டாளும் இருந்தார்களாம்.. சின்ன வயதில் இருந்தே ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக படித்து வளர்ந்து, இப்போது ஒன்றாகவே தொழில் செய்பவர்கள்.. இந்தநிலையில் முட்டாளுக்கு கல்யாணம் நிச்சயமாக, தன நண்பனுக்கு ஏற்றவளா என அந்தப்பெண்ணை கோக்குமாக்காக இன்டர்வியூ பண்ணி மிரளவைக்கிறார் அடிமுட்டாள்..

முட்டாளின் முதலிரவன்று கட்டில் ஒடியுமாறு கலாட்டா பண்ணி முதலிரவு தடைபட காரணமாகிறார் அடி முட்டாள்.. இதனால் முட்டாளின் மனைவி உன் பிரண்டோட சகவாசத்தை நிறுத்தினால் தான் முதலிரவு என ரெட் கார்டு போடுகிறார். சும்மா சுற்றும் தனது அடிமுட்டாள் நண்பனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைத்தால், அவன் நம் வழியில் வரமாட்டான் என நினைக்கும் இந்த முட்டாள், அவனை திருமணத்துக்கு தூண்டுகிறார்..

திருமண தகவலை பதியச்சென்ற இடத்தில் அங்கு வேலைபார்க்கும் பெண்மீதே உடனடி காதல்வர, என்ன செய்தும் அந்தப்பெண் மசிய மறுக்கிறார். திடீரென அந்தப்பெண்ணுக்கு வேறு ஒரு மொக்கை மாப்பிள்ளையை வீட்டில் பார்க்க, அவனுக்கு இவன் எவ்வளவோ பெட்டர் என்று, ஒருநாள் இரவில் பீர் அடித்துவிட்டு காதலை ஒகே பண்ணுகிறாள் அந்த சுந்தரி..

இப்போது இந்தப்பெண்ணை இண்டர்வியூ பண்ண கோக்குமாக்கு கேள்விகளுடன் தயாராகிறார் முட்டாள்.. ஏற்கனவே முட்டாள் மீது வெறுப்பில் இருக்கும் சுந்தரி, அவனது ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணினால் தான் நமது கல்யாணம் என அடிமுட்டாளிடம் கண்டிஷன் போடுகிறாள்.. ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்” என காதலை தூக்கிப்போட்டுவிட்டு நண்பனை தேடி வருகிறார் அடிமுட்டாள். இருவரும் சேர்ந்து தங்களது பிரச்சனையை ஊர்ப்பிரச்சனையாக்கி தீர்வு காண முயற்சிக்கிறார்கள்.. நடந்தது என்ன என்பது க்ளைமாக்ஸ்.

கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவர்களை முட்டாள், அடிமுட்டாள் என வகைப்படுத்தியிருக்கிறோம் தவிர, ஆவி படத்தின் கதாநாயகர்களை எந்தவிதத்திலும் குறிக்காது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறோம்.. ‘பரமார்த்த குருவும் அவரது சீடர்களும்” என்கிற சிறுவர் கதைகளை படித்து வந்தவர்களுக்கு இந்தக்கதையில் உள்ள நியாயம் எளிதாக புரியும்..

கலகலப்பாக செல்லும் கதையை ஆர்யா, சந்தானம் இருவருமே சம பலம் கொடுத்து தாங்கியிருக்கிறார்கள். படத்தில் யார் ஹீரோ என்று சொல்லமுடியாத அளவுக்கு ஏறத்தாழ அனைத்து காட்சிகளிலும் இணைந்தே வருகிறார்கள் (இரண்டே இரண்டு டூயட் தவிர)..

படத்தில் ஆர்யா, தமன்னா என ஒருவர் விடாமல் காலாய்க்கும் ஸ்பெஷலிஸ்ட்டான சந்தானம் கொளுத்திப்போடும் டயலாக் வெடிகளில் 70 சதவீதம் ஓரளவு சத்தத்துடன் வெடிக்கவே செய்திருக்கின்றன. வித்யுலேகா ராமின் காமெடியை மிஞ்சுகிறது தமன்னாவின் அம்மாஞ்சித்தனம்.

கருணாகரன் என்பவரை ஆரம்ப காட்சியில் காண்பித்துவிட்டு, பின்னர் க்ளைமாக்ஸ் நெருங்கும்போதுதான் அவரது ஞாபகம் வந்ததுபோல் கால்மணிநேர பெர்பார்மன்ஸுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் சஸ்பென்ஸ் கெஸ்ட் என்ட்ரியாக வரும் விஷால் அடிக்கும் கூத்து சிரிக்கும்படியாக இல்லை என்றாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது. இன்னும் ஷகிலா கூட தனது படத்துக்கு பலம் என ராஜேஷ் நம்புகிறார் பாருங்களேன்..

இமானின் இசையில் இரண்டு பாடல்கள் தாளம்போட்டு, கூடவே ஆட்டமும் போட தூண்டும் ரகம் தான்.. நாட்டில் நண்பர்களுக்குள் இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் நடக்கிறதா என்பதை ராஜேஷ் படங்களை பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு நண்பன், அவனுக்கு எப்போதும் இம்சை கொடுக்கும் இன்னொரு நண்பன் என்கிற பார்முலாவில் இருந்து மாறாமல், தனது சரக்கு சைட் டிஷ் சித்தாந்தங்களை மீறாமல் தனது முந்தய படங்களின் சாயல்களிலேயே படத்தை நகர்த்துகிறார் இயக்குனர் ராஜேஷ்.

மொத்தத்தில் “புல் அடித்து விட்டு போதையானவன் போல்” நகரும் திரைக்கதையால் “வாசுவும் சரவணனும்” குப்புற கவிழ்ந்து மட்டையாகி விடுகிறார்கள்!