வேதாளம் – விமர்சனம்

அண்ணன் தம்பி செண்டிமெண்டை வைத்து வீரம் தந்த இயக்குனர் சிவா, அண்ணன் தங்கை பாசத்தை வைத்து ஆக்சன் ரூட்டை பிடித்து நவீன பாசமலர் ஆக ‘வேதாளம்’ படத்தை உருவாக்கியுள்ளார்.

கதை ரொம்பவே சிம்பிள்.. தங்கை லட்மி மேனனின் கல்லூரி படிப்பிற்காக கல்கத்தா வரும் அஜித், அங்கேயே தங்கி கால் டாக்சி ட்ரைவராக வேலைபார்க்கிறார்.. இடையில் ஸ்ருதியுன் நட்பு ஏற்பட, ஸ்ருதியின் அண்ணனுக்கும் லட்சுமி மேனனுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.

இந்த நிலையில் அஜித் கடத்தல் கும்பல் தாதாக்களை போட்டுத்தள்ளுவதை பார்த்து டெரர் ஆகிறார் ஸ்ருதி.. கால் டாக்சி ட்ரைவரான அஜித் ‘காலன்’ ஆக அவதாரம் இருக்க வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை ஸ்ருதிக்கு மட்டுமல்ல, நமக்கும் விளக்குகிறது மீதிப்படம்.

பாட்ஷாவின் பைரேடட் காப்பியாக வேதாளத்தை பாலிஷ் பண்ணியிருக்கிறார்கள்.. அஜித்தின் ஆக்சன் அவதராமும், செண்டிமென்ட் செக்சனும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.. பாஸ் அடுத்த படத்திலாவது ‘டை’ அடிங்க பாஸ் என சொல்லும் விதமாக அவரது சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை பார்த்து பார்த்து சத்தியமாக போரடிக்கிறது சாமி.

பிரண்ட்ஷிப், கிளாமர், ஹீரோவுக்கு அறிவுரை என ஏழாம் அறிவில் இருந்து ஸ்ருதிஹாசன் செய்துகொண்டிருக்கும் அதே ரோலின் இன்னொரு வெர்ஷன் தான் இதிலும்.. ஆனால் பாசமிகு தங்கையாக பாந்தமான ரோலில் வந்து ரசிகர்களை தனது பக்கம் திருப்பி கொள்கிறார் லட்சுமி மேனன்.

தம்பி ராமையா, அப்புக்குட்டி, மயில்சாமி என வீரம் டீமுக்கு இதிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் சூரி, நான் கடவுள் ராஜேந்திரன், கோவை சரளா என காமெடி செண்டிமெண்ட் ஏரியாவை பில்-அப் செய்கிறார்கள். விமானத்தில் வைத்து வேண்டாதவர்களை தீர்த்துக்கட்டும் ஹைடெக் வில்லத்தனத்தில் ராகுல் தேவ் வழக்கம்போல.

அனிருத் ட்யூன் போடுவதுதான் பாட்டு என்றாகிவிட்டபோதுபோது, அது ‘ஆலுமா டோலுமா’ ஆனாலும் ஹிட் என சொல்லித்தானே ஆகவேண்டும்.. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் அனிருத்.. வெற்றியின் கேமரா கல்கத்தா நகர வீதிகளில் ஏகாந்தமாக பயணிக்கிறது.

ஆக்சன் காட்சிகளுக்கான பின்னணியில் பல லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்.. அதுதான் இயக்குனர் சிவாவுக்கும் வசதியாக போய்விட்டது. வீரம் படத்தில் மூன்று நிமிடத்திற்குள் ஒரே தண்டவாளத்தில் மூன்று ட்ரெயின்களை ஓடவிட்டு அஜித் ரசிகர்களுக்கு கண்கட்டி வித்தை காட்டியவர் இதில் இன்னும் ஒரு படி அதிகமாக மாயஜாலம் காட்டியிருக்கிறார்.

மற்றவர்களுக்கு திருப்தியோ இல்லையோ அஜித் ரசிகர்களுக்கு பரம திருப்தி.. அதுதானே அஜித்துக்கும் அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்களுக்கும் வேண்டியது.. அந்தவகையில் இந்த வேதாளம் முருங்கை மரமல்ல, பனைமரத்திலேயே ஏறியிருக்கிறது.

சிறுத்தை மாதிரி ஒரு படம் எப்போ பண்ணுவீங்க சிவா..? வீ ஆர் வெயிட்டிங்.