குற்றம் கடிதல் – விமர்சனம்

விருது வாங்கிய படமா… ஆளைவிடுங்க சாமி என்று ஓடி ஒளிந்த காலம் போய், விருது வாங்கிய படத்தை முதல் நாள் முதல் ஆளாய் பார்க்கும் ஆவலை விதைத்தது ‘காக்கா முட்டை’… அதன் அடியொற்றி, ரிலீஸாவதற்கு முன்பே தேசியவிருதுடன் பல சர்வதேச விருதுகளையும் அள்ளிக்கொண்டு ரிலீஸாகி இருக்கிறது ‘குற்றம் கடிதல்’.. இது படமா..? பாடமா..? பார்க்கலாம்.

பள்ளி மாணவன் ஒருவன், தன்னிடம் பர்த்டே என சாக்லேட் நீட்டும் சக மாணவிக்கு பிறந்தநாள் பரிசாக அன்பாக முத்தம் தருகிறான். இதை கண்டிக்கும் டீச்சரிடம் “உங்க பர்த்டேனா உங்களுக்கு கூட முத்தம் தருவேன் டீச்சர் என அவன் கிண்டல் அடிக்க” கோபத்தில் மாணவனை ஓங்கி அறைகிறார் டீச்சர். மயங்கி விழும் மாணவனை மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு நிலைமை சீரியஸ் ஆகிறது..

நிலைமை சீராகும் வரை, கொஞ்சநாளைக்கு எங்காவது தலைமறைவாக இருக்கும்படி பள்ளி நிர்வாகம் டீச்சரிடம் அறிவுறுத்த, தப்பு செய்துவிட்ட குற்ற உணர்வுடன் தன் கணவர் துணையுடன் ஊரைவிட்டு பயணப்படுகிறார் மெர்லின் டீச்சர்.. இங்கே பையனின் அம்மா மகனின் உயிரை காக்க போராட, பையனின் தாய்மாமனோ தப்பித்துப்போன டீச்சரை தேடுகின்றார்.

குற்ற உணர்வினாலும், பையனுக்கு என்ன ஆயிற்றோ என்கிற பரிதவிப்பினாலும் மனம் கேட்காமல் பாதியிலேயே திரும்பும் மெர்லின் டீச்சர், பையனின் அம்மாவின் காலடியிலேயே விழுகிறார். பையனின் நிலை என்ன ஆனது, அவன் குடும்பத்தாரின் கோபத்தில் இருந்து டீச்சரால் தப்பிக்க முடிந்ததா என்பதை பதைபதைப்புடன் சொல்லி, இறுதியில் ‘அப்பாடா’ என ரிலீப் கொடுத்து அனுப்புகிறார்கள்..

அந்த காலத்தில் (அப்படி சொல்லக்கூடாதுதான்) ஆசிரியர், தன் கையில் உள்ள வாட்சை கழட்டினாலே தப்பு செய்த மாணவன் மிரளுவான்.. ஆசிரியரும் வாட்சை கழட்டுவதோடு சரி.. அடிக்க மாட்டார்.. இதுதான் மாணவர்களின் தவறுகளை திருத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட மிதமான வன்முறை.. மற்றபடி மாணவனை அடித்து அவன் உயிருக்கே உலைவைக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு யார் தந்தது என இன்றைய நாகரிக உலகில் உலவும் சில உணர்ச்சிவசப்பட்ட காட்டுமிராண்டி ஆசிரியர்களின் செவுளில் அறிகிறது இந்த குற்றம் கடிதல்…

ஆனால் மெர்லின் டீச்சர் அப்படி ஒன்றும் கெட்டவர் அல்ல. மாறிவரும் தலைமுறை மாற்றத்தை மனதில் உள்வாங்க தவறியதால் அவர் பார்வைக்கு சிறுவன் செய்தது தவறு என தோன்றியது. உணர்ச்சிவசப்பட்டு அடித்தார். அது சரிதான் என்று எந்த சால்ஜாப்பும் சொல்லமுடியாதபடி கச்சிதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

மெர்லின் டீச்சர் கதாபாத்திரத்திற்கு தனது யதார்த்தமான நடிப்பால் உருவமும் உயிரும் கொடுத்திருக்கிறார் ராதிகா பிரசித்தா. பையனை அடித்துவிட்டு, தன்மீது தான் தப்பு என தெரிந்து, எதுவந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என தைரியம் காட்டும்போதும், தப்பி ஓடிய பாதி வழியில் குற்ற உணர்வால் திரும்பி வந்து பையனின் தாயிடமே வந்து கதறும் காட்சியிலும் அவர் பாவ புண்ணியங்களுக்கு பயந்த, நீதி நியாயங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு சராசரி பெண்மணியாகத்தான் நம் கண்முன்னே காட்சி தருகிறார்..

பையன் பிழைப்பானா என்று தெரியாத நிலையிலும், தன் மகனை அடித்த டீச்சரை கட்டிப்பிடித்து கண்ணீருடன் ஆறுதல் சொல்லும் தாய், தனது மருமகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பதைபதைப்பில் பள்ளி நிர்வாகத்திடம் சண்டைக்கும் போவதாகட்டும், ஆவேசத்துடன் டீச்சரை தேடுவதாகட்டும் எந்த இடத்திலும் வரம்பு மீறாமல் கோபம் காட்டும் தாய்மாமன் பாவெல் நவகீதன் என எல்லோருமே எளிமையான உருவில் நடமாடும் மனித தெய்வங்களாகத்தான் தெரிகிறார்கள்.

மனைவி தவறு செய்துவிட்டால் என்றாலும், அந்த இக்கட்டான சூழலில் அவருக்கு துணையாய், கனிவான கணவனாக வரும் சாய்ராஜ்குமார், தங்கள் தரப்பில் நேரும் தவறுகளை நியாயப்படுத்த முனையாத பள்ளி முதல்வராக வரும் குலோத்துங்கன், சிறுவனாக நடித்திருக்கும் செழியன் என எல்லோருமே கொடுக்கப்பட்ட வட்டத்திற்குள் சிறிதும் தடுமாறாமல் வலம் வருகிறார்கள்.

குறைந்த அளவிலான கதாபாத்திரங்களை கொண்டு எங்கும் சோர்வு தட்டாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கும் இயக்குனருக்கு கேமரா, இசை, எடிட்டிங் உட்பட சக தொழில் நுட்ப கலைஞர்களும் சரியான ஒத்துழைப்பு தந்திருப்பது படமாக்கப்பட்ட நேர்த்தியில் இருந்தே தெரிகிறது.

இன்றைய கல்வி முறை, ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கும் விதம், ஆசிரியர்களின் மனநிலை என இன்றைய சூழலுடன் பொருந்திப்போகிற நிகழ்வுகளை அழகான கதையாக்கி, அதை கடைசிவரை பதைபதைப்பு குறையாமல் படமாக்கியிருக்கும் இயக்குனர் பிரம்மாஜி, ஒரு நல்ல இயக்குனர் என்கிற வார்த்தைக்கு எல்லா விதத்திலும் தகுதியானவராக கச்சிதமாக பொருந்துகிறார்.

குற்றம் கடிதல் – பள்ளி (ஆசிரியர்களுக்கான) பாடம்..!

Verdict: 3.5/5