144 – விமர்சனம்

கதை என்னவோ இரண்டு கிராமங்களுக்குள் காலம் காலமாய் மீன் பிடிக்கும் கண்மாய் காரணமாக பகை என்றாலும் இது ‘சண்டிவீரனும்’ அல்ல.. தேவர் மகனும் அல்ல.. இந்தப்படம் வேற ரூட்..

பூட்டுக்களை திறப்பதில் கில்லாடி சிவா. இவர்மீது விலைமாதான ஓவியாவுக்கு ரொமான்ஸ். அதே ஊரில் மிராசுதார் ரேஞ்சில் முக்கியஸ்தராக இருக்கும் மதுசூதனனிடம் ட்ரைவர் அசோக் செல்வன்.. முதலாளி மகளுக்கும் இவருக்கும் லவ்வு.. மற்றவர்களிடம் உள்ள கள்ள பணத்தை, தங்கத்தை ஒளித்துவைத்து தேவைப்படும்போது அவர்களுக்கு கொடுக்கும் வேலை மதுசூதனனுடையது.

இந்தநிலையில் ஊரில் 144 போடப்படுகிறது. ஆற்றில் கரைக்கவேண்டிய விநாயகர் சிலை கொட்டகையில் வைத்து பூட்டப்படுகிறது.. அதில் தான் தங்க கட்டிகளை தற்காலிகமாக பதுக்குறார் மதுசூதனன். ஆனால் தங்கத்தை பறிகொடுத்த உண்மையான ஆள் மோப்பம் பிடித்து இங்கே வந்துவிடுகிறான்.

அதற்குள் சிவா, சிலைசெய்துகொடுத்த முனீஷ்காந்த் ராம்தாஸ், ஓவியா ஆகியோர் தங்கத்தை கடத்திக்கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள். கூடவே ஊரைவிட்டு ஓடும் அசோக் செல்வனும் அவரது காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனும் இந்த ஜோதியில் ஐக்கியமாகின்றனர்.. தங்கத்தை இவர்கள் பங்கு போட்டார்களா..? தங்கம் இவர்களை பங்கு பிரித்ததா..? என்பது க்ளைமாக்ஸ்.

கொஞ்சம் கவனமாக பார்க்கவேண்டிய படம் தான். காரணம் வித்தியாசம் என்கிற பெயரில் அந்த அளவுக்கு நிறைய குழப்படிகளும் இருக்கின்றன. தரைமேலே நூற்றுக்கணக்கான போலீஸார் காவல் காக்க, கீழே சுரங்கப்பபாதை வழியாக அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் கிராமத்து மக்கள் செய்வது தான் இதில் ஹைலைட்டான அம்சமே.

திருடுவதற்கு தனக்கு தகுதி இல்லை என போலீஸார் சொல்வதை கேடும் மறுகும் சிவா, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து டீ க்ளாஸ்களுடன் தப்பி ஓடுவது செம லந்து. தங்கத்தை பதுக்கும் மதுசூதனனின் மொக்கை ஐடியாக்கள் சிரிக்க வைக்கின்றன. வித்தியாசமான லோ பிபி டார்ச்சர் வில்லன் உதயானு மகேஸ்வரன் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார். முனீஷ்காந்த் ராம்தாஸ் – ஓவியா இடையேயான கெமிஸ்ட்ரியும் அதற்கு சிவா அவ்வப்போது 144 போடுவதும் சரியான தமாஷ்.

தங்கத்தை கடத்தும்வரை இருந்த சுவாரஸ்யம் அதன்பின் சப்பென முடிந்துவிடுகிறது… சிலைகளில் பணத்தை, தங்கத்தை மறைத்து முச்சந்தியில் நிற்க வைப்பது எல்லாம் ஓவர். இடைவேளை வரை சுவாரஸ்யமாக கதையை நகர்த்திய இயக்குனர் மணிகண்டன் இடைவேளைக்குப்பின் நன்றாகவே தடுமாறி இருக்கிறார்.

144 போடப்பட்ட இரு கிரமாத்து மனிதர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை மட்டும் காமெடியாக காட்சிப்படுத்தி இருந்தாலே போதுமே. இதில் ஏன் தங்க கடத்தலை உள்ளே நுழைத்து சொதப்பினார்கள் என்றுதான் தெரியவில்லை.